×

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!: தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை..!!

சென்னை: தமிழ் மக்களின் நலனுக்காக சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார்.

20 மாதங்களில் இமாலய சாதனை:

20 மாதங்களை கடந்துள்ளது திமுக அரசு, அதற்குள் இமாலய சாதனை செய்துள்ளோம். காலம் குறைவு, ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது.

திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி திமுக செயல்படுகிறது:

தமிழ்நாட்டில் வீரத்துடனும், விவேகத்துடனும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் கொள்கைகளை உருவாக்கி அதன் அடிப்படையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது:

தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. தொழில், வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் பன்முக கூறுகளை விளக்கியும் தமிழ்நாடு அரசு எந்த வகையில் செய்யப்படுகிறது என பாராட்டி ஆளுநர் பேசினார் என முதல்வர் தெரிவித்தார்.

கவிஞர் முத்துக்கூத்தன் கவிதை:

கவிஞர் முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டி முதலமைச்சர் உரையாற்றினார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் கைகள் மறைவதில்லை என்ற முத்துக்கூத்தன் கவிதையை மேற்கோள்காட்டினார். வேகமாகவும் அதே நேரத்தில் விவேகமாகவும் செயல்பட்டு வருகிறோம்.

ஆளுநர் உரையை அரசியலாக்க விரும்பவில்லை:

கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையின் போது நிகழ்ந்தவற்றை குறித்து மீண்டும் பேசி அரசியலாக்க விரும்பவில்லை. சட்டப்பேரவைக்கு வந்து உரையாற்றிய ஆளுநருக்கு நன்றி என முதல்வர் தெரிவித்தார்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை:

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. செந்தமிழே நீ பகை வென்று முடிசூடிவா. மயிலாட வான்கோழி தடை  செய்வதோ; மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ; முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ; அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ, உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன்:

நாள்தோறும் உழைத்து வருகிறேன் என்கிறார்கள்; நான் நொடிக்கு நொடி உழைத்து வருகிறேன். கடிகாரம் ஓடும் முன் ஓடு என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப செயல்பட்டு கொண்டிருக்கிறோம். யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஓடி கொண்டிருக்கவில்லை; அது என் இயல்பு. 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை முன்னோக்கி ஓட வைத்திருக்கிறோம் என்று முதல்வர் தெரிவித்தார்.

13,428 பணிகளுக்கு அடிக்கல்:

13,428 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு அரசு சார்பில் உதவிகளை வழங்கியுள்ளோம்.

9000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப் பயணம்:

கடந்த ஆண்டில் 9000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஓராண்டில் 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

கலைஞரிடம் கற்ற பாடம் என்னை உழைக்க தூண்டுகிறது:

கலைஞரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உழைக்கத் தூண்டுகிறது. இரவு தூக்கம் மட்டுமே எனது ஓய்வு நேரமாக இருக்கிறது. ஒரு கோடிக்கு மேல் தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்து கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் ரூ.2,57,850 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. என்னால் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் 67 என முதல்வர் குறிப்பிட்டார்.

சக்தியை மீறி செயல்படுவேன்:

மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன். நூற்றாண்டைக் கடந்த இச்சட்டமன்றத்தின் விழுமியங்களை காக்க என் சக்தியை மீறி செயல்படுவேன். இதுவரை 3346 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 86 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல என்று முதல்வர் கூறினார்.

15 மாதங்களில் 1.5 லட்சம் இலவச மின்இணைப்புகள்:

விவசாயிகளுக்கு 15 மாதங்களில் வழங்கப்பட்ட இலவச மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,50,000. சொன்னதை செய்ததால் வளர்ச்சி அடைந்து இருக்கிறோம்.

தொழில் தொடங்க சிறந்த மாநிலம்:

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம்.

சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம்:

தமிழ்நாடு மக்களின் நலன் என்று வந்துவிட்டால் சொல்லாததையும் செய்வோம்; சொல்லாமலும் செய்வோம் என்று முதல்வர் கூறினார். கடந்த ஆண்டை காட்டிலும் தமிழ்நாடு பல்வேறு பிரிவுகளில் முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. 3.44 லட்சம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.2.23 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு:

தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு முன்னேறி உள்ளது. தொழில் என்பது மாநிலத்தின் மொட்டுமொத்த வளர்ச்சியின் முகமாக உள்ளது. ரூ.2.23 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது, ஆனால் தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 3.44 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 207 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 111 நிறுவனங்கள் தொழில்களை தொடங்கியதன் மூலம் ரூ.13,726 கோடி முதலீடு கிடைக்கப்பெற்றுள்ளது. பிசினஸ் லைன் எழுதியுள்ள கட்டுரையில் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக கூறப்பட்டுள்ளது.

2024 ஜனவரி 10,11ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு:

2024 ஜனவரி 10,11ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். 2024 ஜனவரி 10,11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் பன்முக கூறுகளை விளக்கியும் தமிழ்நாடு அரசு எந்த வகையில் செயல்படுகிறது என பாராட்டி ஆளுநர் பேசினார்.

அனைத்தையும் கேட்டு கேட்டு வாங்க வேண்டிய நிலை:

அனைத்து நிதிகளையும் ஒன்றிய அரசிடம் கேட்டு கேட்டு தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கட்டணங்களை உயர்த்தினால் தான் நிதி தருவதாக ஒன்றிய அரசு கூறுகிறது.

நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல:

நாங்கள் நாத்திகர்கள் என்பதால் கோயில்கள் சீரமைக்கவில்லை என வதந்தி பரப்புகிறார்கள். நாங்கள் மதவாதத்துக்குதான் எதிரானவர்கள்; மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை வளர விடமாட்டோம். குற்றச்சாட்டு கூறுவதாக இருந்தால் ஆதாரத்துடன் கூற வேண்டும்; பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது.

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது:

காவல்துறை தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மதக் கலவரங்களோ, சாதி கலவரங்களோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடோ நடைபெறவில்லை. அரசின் சீரிய நடவடிக்கையால் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மதவாத, இனவாத, தீவிரவாத அமைப்புகளை ஒருபோதும் இந்த அரசு வளரவிடாது. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வட மாநிலத்தவர்கள் விவரங்கள் சேகரிப்பு:

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி என முதல்வர் கூறினார்.

ரூ.3,500 கோடி கோயில் ஆக்கிரமிப்பு சொத்து மீட்பு:

ரூ.3,500 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளி வாசல்களை செப்பனிட வழங்கப்படும் மானியத் தொகை ரூ.6 கோடியில் இருந்து, ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ் மொழி கற்பிக்கப்படுவது கண்காணிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்பிக்கப்படுவது கண்காணிக்கப்படும். தமிழை காக்கும் பணியில் திமுக அரசு தொடர்ந்து செயல்படும். மருத்துவ படிப்புக்காக 5 பன்னாட்டு நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

பேரூராட்சிகளிலும் நமக்கு நாமே திட்டம்:

நமக்கு நாமே திட்டம் பேரூராட்சி, நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படும். 233 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்; ஒருவர் மட்டும் அளிக்கவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியை விட ரூ.4,000 கோடி கடன் குறைவு:

அதிமுக ஆட்சியில் 2020 - 21ல் நிகர கடனாக ரூ.83,275 கோடி வாங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியை விட ரூ.4000 கோடி குறைவாகவே திமுக அரசு கடன் வாங்கி உள்ளது. கடன் நிதி நெருக்கடி இருந்தபோதும் திறமையான நிர்வாகத்தால் 2021- 22ல் ரூ.79,333 கோடியாக குறைத்துள்ளோம்.

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்:

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீள சாலைகள் ரூ.4000 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்:

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2023 - 2024ம் நிதியாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். காலை உணவு திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Aadhavan ,G.K. Stalin , For the welfare of the Tamil people, we will do what is not said, Chief Minister M.K.Stalin
× RELATED பெண்களுக்கு பாலின சமத்துவம் அவசியம்...